போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் கேள்வி பதில்கள்

இந்திய அஞ்சலகத்தில் என்னென்ன முக்கிய சேமிப்புத் திட்டங்கள் உள்ளன?

இந்திய அஞ்சலகம் பொதுமக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்குகிறது:

 1. அஞ்சலக சேமிப்பு கணக்கு (SB)
 
2. 5 வருட தொடர் வைப்பு நிதி (RD)

 3. கால வைப்பு நிதி (TD - 1, 2, 3, 5 ஆண்டுகள்)
 
4. மாதாந்திர வருமான திட்டம் (MIS)
 
5. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)
 
6. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
 
7. சுகன்யா சம்ரிதி யோஜனா / செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY)
 
8. தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)
 
9. கிசான் விகாஸ் பத்திரம் (KVP)
 
10. மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் (MSSC)

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

ஆம், முற்றிலும் பாதுகாப்பானது. இத்திட்டங்கள் அனைத்தும் இந்திய அரசாங்கத்தால் (Government of India) நேரடியாக நடத்தப்படுவதால், உங்களது பணத்திற்கு 100% உத்தரவாதம் உண்டு.

அஞ்சலக சேமிப்பு கணக்கு (Savings Account) தொடங்க குறைந்தபட்சத் தொகை எவ்வளவு?

குறைந்தபட்சம் ₹500 செலுத்தி அஞ்சலக சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம்.

ஒரு நபர் எத்தனை அஞ்சலக சேமிப்பு கணக்குகளைத் தொடங்கலாம்?

ஒரு நபர் தனது பெயரில் ஒரே ஒரு தனிநபர் சேமிப்பு கணக்கை (Single Account) மட்டுமே தொடங்க முடியும்.

அஞ்சலகத்தில் கூட்டு கணக்கு (Joint Account) தொடங்க முடியுமா?

ஆம், தொடங்கலாம். அதிகபட்சமாக மூன்று பெரியவர்கள் (Adults) இணைந்து ஒரு கூட்டு கணக்கைத் தொடங்க முடியும்.

கூட்டு கணக்கில் உள்ள வகைகள் யாவை?

Joint-A:கணக்கில் உள்ள அனைவரும் இணைந்துதான் பணத்தை எடுக்க முடியும்.

Joint-B:கணக்கிலுள்ளவர்களில் யாராவது ஒருவர் நினைத்தாலும் பணத்தை எடுக்கலாம் (Either or Survivor).

அஞ்சலக சேமிப்பு கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) எவ்வளவு?

குறைந்தபட்ச இருப்புத் தொகை ₹500 ஆக இருக்க வேண்டும்.
 
குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையெனில் என்ன நடக்கும்?

நிதியாண்டின் இறுதியில் கணக்கில் ₹500 இல்லை என்றால், ₹50 பராமரிப்பு கட்டணமாக (Maintenance Fee) கழிக்கப்படும். கணக்கின் இருப்பு பூஜ்ஜியமானால் கணக்கு தானாகவே மூடப்படும்.
 
அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு தற்போதைய வட்டி விகிதம் என்ன?

தற்போது அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு ஆண்டுக்கு 4.0% வட்டி வழங்கப்படுகிறது.

அஞ்சலக கணக்குகளுக்கு வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி முதல் மாத இறுதி வரை உள்ள நாள்களில் கணக்கிலிருக்கும் குறைந்தபட்ச தொகையைக் கொண்டு வட்டி கணக்கிடப்பட்டு, ஆண்டு இறுதியில் கணக்கில் சேர்க்கப்படும்.

அஞ்சலக RD திட்டத்தின் முதிர்வு காலம் (Tenure) என்ன?

அஞ்சலக ஆர்.டி (RD) திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) ஆகும்.

RD திட்டத்தை எவ்வளவு தொகையுடன் தொடங்கலாம்?

குறைந்தபட்சம் ₹100 செலுத்தி தொடங்கலாம். அதற்கு மேல் ₹10-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.

மாத சந்தாவை எந்த தேதிக்குள் செலுத்த வேண்டும்?
 
மாதத்தின் 1 முதல் 15-ஆம் தேதிக்குள் கணக்கு தொடங்கப்பட்டால், அடுத்தடுத்த மாதங்களில் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
 16 முதல் மாத இறுதிக்குள் தொடங்கப்பட்டால், மாதத்தின் இறுதி நாளுக்குள் செலுத்த வேண்டும் Default கட்டணத்தைத் தவிர்க்கலாம்.

RD கணக்கில் பணம் செலுத்த தவறினால் அபராதம் உண்டா?

ஆம், உண்டு. செலுத்தத் தவறிய ஒவ்வொரு ₹100-க்கும் ₹1வீதம் அபராதம் (Default Fee) வசூலிக்கப்படும்.

தொடர்ந்து எத்தனை மாதங்கள் பணம் செலுத்தாவிட்டால் RD கணக்கு முடக்கப்படும்?

தொடர்ந்து 4 மாதங்கள் தவணை செலுத்தவில்லை எனில், கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் (Discontinued). அடுத்த 2 மாதங்களுக்குள் அபராதத்துடன் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முற்றிலும் மூடப்படும்.

RD கணக்கை முன்கூட்டியே மூட முடியுமா (Premature Closure)?

ஆம், கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு கணக்கை முன்கூட்டியே மூடலாம். ஆனால், அதற்கு அஞ்சலக சேமிப்பு கணக்கின் வட்டி (4%) மட்டுமே வழங்கப்படும்.

RD கணக்கின் மீது கடன் பெற முடியுமா?

ஆம், 12 தவணைகள் (1 வருடம்) முறையாகச் செலுத்திய பிறகு, கணக்கில் உள்ள தொகையில் 50% வரை கடன் (Loan) பெறலாம்.

RD கடனுக்கான வட்டி விகிதம் என்ன?

RD திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டியை விட 2% கூடுதலாக கடனுக்கான வட்டி வசூலிக்கப்படும்.

5 ஆண்டுகள் முடிந்த பிறகு RD கணக்கை நீட்டிக்க முடியுமா?

ஆம், முதிர்வுக்குப் பின் மேலும் 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம் (Extension).

ஒரு நபர் எத்தனை RD கணக்குகளை வைத்திருக்கலாம்?

ஒரு நபர் எத்தனை RD கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

அஞ்சலக கால வைப்பு (TD -Term deposit) கணக்கு என்றால் என்ன?

இது வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு நிதி (Fixed Deposit) போன்றது. ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு அஞ்சலகத்தில் முதலீடு செய்யும் திட்டமாகும்.

TD திட்டம் எத்தனை கால அளவுகளில் கிடைக்கிறது?

இது 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் ஆகிய நான்கு கால அளவுகளில் கிடைக்கிறது.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச முதலீடு எவ்வளவு?

குறைந்தபட்ச முதலீடு ₹1,000 ஆகும். அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதுமில்லை.


TD கணக்கின் வட்டி எப்போது வழங்கப்படும்?

வட்டி ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டு, முதலீட்டாளரின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

எந்த கால வைப்பு நிதிக்கு வருமான வரி விலக்கு உண்டு?

5 வருட கால வைப்பு நிதி (5-Year TD) திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம்.

1, 2 அல்லது 3 வருட TD கணக்குகளுக்கு வரி விலக்கு உண்டா?

இல்லை, 5 வருட TD திட்டத்திற்கு மட்டுமே வரி விலக்கு பொருந்தும்.

TD கணக்கை முன்கூட்டியே மூட முடியுமா?

ஆம், கணக்கு தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகு முன்கூட்டியே மூடலாம்.

6 மாதத்திற்கு பின் 1 வருடத்திற்குள் கணக்கை மூடினால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

கணக்கு தொடங்கி 6 மாதத்திற்குப் பின் 1 வருடத்திற்குள் மூடினால், சாதாரண அஞ்சலக சேமிப்பு கணக்கின் வட்டி (4%) மட்டுமே வழங்கப்படும்.

முதிர்வுக்குப் பின் TD கணக்கு தானாகவே நீட்டிக்கப்படுமா (Auto Renewal)?

ஆம், முதிர்வு தேதியன்று அக்கணக்கு அதே கால அளவிற்கு தற்போதைய வட்டி விகிதத்தில் தானாகவே நீட்டிக்கப்படும்.

மைனர் (Minor) பெயரில் TD கணக்கு தொடங்கலாமா?

ஆம், 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் தங்கள் பெயரிலேயே கணக்கை இயக்கலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கைத் தொடங்கலாம்.
 
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் (
(Monthly Income Scheme - MIS) என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டி வருமானத்தைப் பெறும் திட்டமாகும். ஓய்வு பெற்றவர்களுக்கும், நிலையான மாத வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கும் இது ஏற்றது.

MIS திட்டத்தின் முதிர்வு காலம் எவ்வளவு?

இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

MIS கணக்கில் தனிநபர் அதிகபட்சமாக எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தனிநபர் கணக்கில் (Single Account) அதிகபட்சமாக ₹9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

கூட்டு கணக்கில் (Joint Account) அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்ன?
கூட்டு கணக்கில் அதிகபட்சமாக ₹15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

கூட்டு கணக்கில் முதலீடு செய்யும் போது பங்குகள் எவ்வாறு பிரிக்கப்படும்?

கூட்டு கணக்கில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சமமான பங்கு (Equal Share) இருப்பதாகவே கருதப்படும்.

MIS திட்டத்தில் மாதாந்திர வட்டி எப்போது கிரெடிட் ஆகும்?

கணக்கு தொடங்கப்பட்ட தேதியிலிருந்து, ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் வட்டித் தொகை உங்களது சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும்.

மாத வட்டியை எடுக்காவிட்டால் அதற்கு கூடுதல் வட்டி கிடைக்குமா?

இல்லை, கணக்கில் தேங்கும் மாதாந்திர வட்டிக்கு எந்த ஒரு கூடுதல் வட்டியும் வழங்கப்பட மாட்டாது.

MIS கணக்கை ஓராண்டுக்குள் மூட முடியுமா?

இல்லை, கணக்கு தொடங்கி 1 வருடம் முடியும் வரை கணக்கை மூட முடியாது.
 
1 முதல் 3 வருடங்களுக்குள் MIS கணக்கை மூடினால் என்ன கட்டணம்?

அசல் தொகையிலிருந்து 2% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
 
3 முதல் 5 வருடங்களுக்குள் MIS கணக்கை மூடினால் என்ன கட்டணம்?

அசல் தொகையிலிருந்து 1% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizen Savings Scheme - SCSS)  சேர தகுதியான வயது என்ன?

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.

60 வயதுக்கு குறைவானவர்கள் யாராவது இதில் சேர முடியுமா?
 
VRS (விருப்ப ஓய்வு) பெற்றவர்கள் 55 வயது முதல் 60 வயதுக்குள் இத்திட்டத்தைத் தொடங்கலாம் (ஓய்வூதியப் பலன்கள் கிடைத்த 3 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும்).
 ஓய்வு பெற்ற பாதுகாப்பு துறை ஊழியர்கள் 50 வயது பூர்த்தியடைந்திருந்தால் இதில் சேரலாம்.

SCSS திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்ன?

ஒரு நபர் அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

SCSS திட்டத்தின் முதிர்வு காலம் என்ன?

இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

முதிர்வுக்குப் பின் இத்திட்டத்தை நீட்டிக்க முடியுமா?

ஆம், 5 ஆண்டுகள் முடிந்த பிறகு மேலும் 3 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம்.
 
SCSS திட்டத்தில் வட்டி எப்போது வழங்கப்படும்?

ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1, மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் காலாண்டுக்கு ஒருமுறை (Quarterly) வட்டி வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு வருமான வரி விலக்கு உண்டா?

ஆம், பிரிவு 80C-ன் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு (அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை) வரி விலக்கு உண்டு.

SCSS வட்டி வருமானத்திற்கு TDS (Tax Deducted at Source) பிடிக்கப்படுமா?

ஆம், ஒரு நிதியாண்டில் கிடைக்கும் வட்டி வருமானம் ₹50,000-ஐ தாண்டினால் TDS பிடிக்கப்படும். இதைத் தவிர்க்க Form 15H சமர்ப்பிக்க வேண்டும்.

கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் கணக்கு என்னவாகும்?

கணக்கு வைத்திருப்பவர் இறந்த தேதியிலிருந்து இக்கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காக மாற்றப்பட்டு, அதற்குரிய வட்டியே வழங்கப்படும்.

SCSS கணக்கை முன்கூட்டியே மூடினால் என்ன அபராதம்?

1 வருடத்திற்குள் மூடினால் வட்டி எதுவும் வழங்கப்படாது (வழங்கப்பட்ட வட்டி அசலில் கழிக்கப்படும்).

1 முதல் 2 வருடத்திற்குள் மூடினால் அசலில் 1.5% கழிக்கப்படும்.
 
2 முதல் 5 வருடத்திற்குள் மூடினால் அசலில் 1% கழிக்கப்படும்.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் யாருக்காக தொடங்கப்பட்டது?

இது பெண் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு திட்டமாகும்.

இக்கணக்கைத் தொடங்க பெண் குழந்தையின் வயது வரம்பு என்ன?

பெண் குழந்தை பிறந்ததிலிருந்து 10 வயது பூர்த்தியடைவதற்குள் இக்கணக்கைத் தொடங்க வேண்டும்.
 
ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தைகளுக்கு இக்கணக்கைத் தொடங்கலாம்?

ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும் (இரட்டையர் அல்லது triplets பிறந்தால் விதிவிலக்கு உண்டு).
 
SSY திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் எவ்வளவு செலுத்தலாம்?

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ₹250 மற்றும் அதிகபட்சமாக ₹1,500,000 (1.5 லட்சம்) வரை செலுத்தலாம்.

குறைந்தபட்ச தொகையைச் செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்?

நிதியாண்டில் ₹250 செலுத்தத் தவறினால் கணக்கு முடக்கப்படும். அதனைப் புதுப்பிக்க ஒவ்வொரு வருடத்திற்கும் ₹50 அபராதம் மற்றும் குறைந்தபட்ச தொகையைச் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் எத்தனை ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும்?

கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து 15 ஆண்டுகள் முடியும் வரை பணம் செலுத்த வேண்டும்.
 
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் (Maturity) என்ன?

கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து 21 ஆண்டுகள் முடிந்தவுடன் இத்திட்டம் முதிர்வடையும்.

பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும் போது பணத்தை எடுக்க முடியுமா?

ஆம், பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான பிறகு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, மேல் படிப்பிற்காக கணக்கில் உள்ள தொகையிலிருந்து 50% வரை பணத்தை எடுக்கலாம்.

இத்திட்டத்தை முன்கூட்டியே எப்போது மூடலாம்?

பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பிறகு திருமணம் நடப்பதாக இருந்தால் கணக்கை மூடி முழு தொகையையும் பெறலாம்.
துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்துவிட்டால் கணக்கு உடனடியாக மூடப்பட்டு பாதுகாவலரிடம் பணம் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு வரி விலக்கு உண்டா?

ஆம், இத்திட்டம் EEE (Exempt, Exempt, Exempt) அந்தஸ்து கொண்டது. முதலீடு, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றிற்குமே முழுமையான வரி விலக்கு உண்டு (பிரிவு 80C).

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - PPF) திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

இது பொதுமக்களுக்கான நீண்ட கால முதலீடு மற்றும் ஓய்வூதிய காலப் பாதுகாப்பை வழங்கும் ஒரு சிறந்த திட்டமாகும்.
 
PPF கணக்கின் முதிர்வு காலம் எவ்வளவு?

PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

ஒரு நிதியாண்டில் PPF கணக்கில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

குறைந்தபட்ச முதலீடு ₹500 மற்றும் அதிகபட்ச முதலீடு ₹1.5 லட்சம் ஆகும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகும் PPF கணக்கை நீட்டிக்க முடியுமா?

ஆம், முதிர்வுக்குப் பின் விருப்பப்பட்டால் 5 ஆண்டுகள் கொண்ட தொகுப்புகளாக (Blocks of 5 years) எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம்.

PPF கணக்கில் முதலீடு செய்வதால் உள்ள வரி நன்மை என்ன?

SSY திட்டத்தைப் போலவே, PPF திட்டமும் EEE வரி விலக்கு பிரிவில் வருகிறது. முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என எதற்கும் வரி கிடையாது.

PPF கணக்கின் மீது கடன் பெற முடியுமா?

ஆம், கணக்கு தொடங்கிய நிதியாண்டிலிருந்து 3-வது நிதியாண்டு முதல் 6-வது நிதியாண்டு வரை கணக்கில் உள்ள தொகையில் கடன் பெறலாம்.

PPF கணக்கிலிருந்து பகுதியளவு பணம் (Partial Withdrawal) எடுக்க முடியுமா?

ஆம், கணக்கு தொடங்கிய 7-வது நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை பகுதியளவாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு நபர் கூட்டு கணக்காக (Joint Account) PPF தொடங்க முடியுமா?

இல்லை, PPF கணக்கை தனிநபர் பெயரில் மட்டுமே தொடங்க முடியும். கூட்டு கணக்கு தொடங்க அனுமதி இல்லை.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) புதிய PPF கணக்கு தொடங்கலாமா?

இல்லை, புதிய கணக்கு தொடங்க முடியாது. ஆனால், ஏற்கனவே கணக்கு தொடங்கிவிட்டு பின்னர் NRI ஆனவர்கள் முதிர்வு காலம் வரை கணக்கை தொடரலாம் (நீட்டிக்க முடியாது).

நீதிமன்ற உத்தரவின் மூலம் PPF பணத்தை முடக்க முடியுமா?

இல்லை, எந்த ஒரு கடனுக்காகவோ அல்லது நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ ஒருவருடைய PPF கணக்கில் உள்ள பணத்தை ஜப்தி (Attachment) செய்ய முடியாது.

தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Certificate - NSC) என்றால் என்ன?

இது நடுத்தர வர்க்கத்தினர் வரி சேமிப்பிற்காகவும், பாதுகாப்பான முதலீடாகவும் பயன்படுத்தும் ஒரு நிலையான வருமான திட்டமாகும்.

NSC திட்டத்தின் கால அளவு என்ன?

NSC திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

NSC கணக்கில் குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

குறைந்தபட்ச முதலீடு ₹1,000 ஆகும். அதிகபட்ச வரம்பு இல்லை.

NSC திட்டத்தில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

வட்டி ஆண்டுதோறும் கூட்டு வட்டியாக (Compounded Annually) கணக்கிடப்பட்டு, முதிர்வின் போது அசலுடன் சேர்த்து ஒரேத் தொகையாக வழங்கப்படும்.

NSC திட்டத்திற்கு வரி விலக்கு உண்டா?

ஆம், பிரிவு 80C-ன் கீழ் முதலீட்டுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு. மேலும், ஆண்டுதோறும் மறுமுதலீடு செய்யப்படும் வட்டிக்கும் வரி விலக்கு கிடைக்கும் (கடைசி வருட வட்டி தவிர).

NSC பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைக்க முடியுமா?

ஆம், அவசர காலங்களில் வங்கிகளில் இ பத்திரங்களை அடமானம் வைத்து கடன் (Loan against NSC) பெறலாம்.

NSC கணக்கை முன்கூட்டியே மூட முடியுமா?

பொதுவாக NSC-யை முன்கூட்டியே மூட முடியாது. ஆனால், கணக்கு வைத்திருப்பவர் இறந்தாலோ அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தாலோ மட்டுமே முன்கூட்டியே மூட அனுமதிக்கப்படும்.

கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP) திட்டத்தின் முக்கிய அம்சம் என்ன?

இத்திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாக (Double) மாற்றித் தரும் முதலீட்டு திட்டமாகும்.
 
KVP கணக்கை யார் தொடங்கலாம்?

இந்திய குடிமக்கள் எவர் வேண்டுமானாலும் தொடங்கலாம். பெயரில் 'கிசான்' என்று இருந்தாலும், இது விவசாயிகள் மட்டுமல்லாது அனைவருக்கும் பொதுவானது.

KVP திட்டத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு எவ்வளவு?

குறைந்தபட்சம் ₹1,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை.

KVP திட்டத்தில் பணம் இரட்டிப்பாகும் காலம் எவ்வளவு?

பணம் இரட்டிப்பாகும் காலம் அரசாங்கம் மாற்றியமைக்கும் வட்டி விகிதத்தைப் பொறுத்து மாறுபடும் (பொதுவாக 115 முதல் 120 மாதங்கள் வரை).

KVP திட்டத்திற்கு வருமான வரி விலக்கு உண்டா?

இல்லை, இத்திட்டத்திற்கு வருமான வரி சட்டம் 80C-ன் கீழ் எந்த ஒரு வரி விலக்கும் கிடையாது. இதன் வட்டி வருமானத்திற்கும் வரி உண்டு.

KVP கணக்கை முன்கூட்டியே மூட முடியுமா?

ஆம், கணக்கு தொடங்கி 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் (2.5 ஆண்டுகள்) முடிந்த பிறகு முன்கூட்டியே மூடிக்கொள்ளலாம்.

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் (Mahila Samman Savings Certificate - MSSC) திட்டம் (MSSC) யாருக்கானது?

இது பெண்களின் மேம்பாட்டிற்காக மற்றும் அவர்களின் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட பிரத்யேக பெண் முதலீட்டு திட்டமாகும்.

MSSC திட்டத்தின் கால அளவு என்ன?

இத்திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
 
இத்திட்டத்தில் அதிகபட்சமாக எவ்வளவு முதலீடு செய்யலாம்?

குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

ஒரு பெண் எத்தனை MSSC கணக்குகளைத் தொடங்கலாம்?

ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் தொடங்கலாம், ஆனால் அனைத்து கணக்குகளையும் சேர்த்து மொத்த முதலீடு ₹2 லட்சத்தைத் தாண்டக்கூடாது. இரண்டு கணக்குகளுக்கு இடையே 3 மாத இடைவெளி இருக்க வேண்டும்.

MSSC திட்டத்திலிருந்து பாதியிலேயே பணம் எடுக்க முடியுமா?

ஆம், கணக்கு தொடங்கி 1 வருடம் முடிந்த பிறகு, கணக்கில் உள்ள தொகையில் 40% வரை பகுதிப் பணமாக (Partial Withdrawal) எடுக்கலாம்.

அஞ்சலக கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை யார் தீர்மானிப்பது?

இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகம் (Ministry of Finance) ஒவ்வொரு காலாண்டிற்கும் (Quarterly) ஒருமுறை வட்டி விகிதங்களை ஆய்வு செய்து மாற்றியமைக்கிறது.

அஞ்சலகத்தில் ஆன்லைன் பேங்கிங் (Internet/Mobile Banking) வசதி உள்ளதா?

ஆம், அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் 'IPPB' (India Post Payments Bank) செயலி அல்லது அஞ்சலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

கணக்குகளுக்கு வாரிசுதாரர் (Nomination) நியமிப்பது அவசியமா?

ஆம், கணக்குத் தொடங்கும் போதே வாரிசுதாரரை நியமிப்பது கட்டாயமாகும். கணக்கு தொடங்கிய பிறகும் எப்போது வேண்டுமானாலும் வாரீசுதாரரை மாற்றலாம்.

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு அஞ்சலக கணக்கை மாற்ற முடியுமா?

ஆம், இந்தியாவின் எந்தவொரு பகுதியில் உள்ள அஞ்சலகத்திற்கும் உங்களது கணக்கை எளிதாக இடமாற்றம் (Transfer) செய்ய முடியும்.

முடங்கிய கணக்கை (Silent / Inactive Account) மீண்டும் செயல்படுத்துவது எப்படி?

தொடர்ந்து 3 நிதியாண்டுகள் எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யாவிட்டால் கணக்கு முடங்கும். புதிய KYC ஆவணங்கள் (ஆதார், பான் கார்டு) மற்றும் விண்ணப்பம் அளித்து மீண்டும் புதுப்பிக்கலாம்.

அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு ஏடிஎம் கார்டு (ATM Card) வழங்கப்படுகிறதா?

ஆம், தனிநபர் மற்றும் கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கார்டு மற்றும் செக் புக் (Cheque Book) வசதிகள் வழங்கப்படுகின்றன.

அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய பான் கார்டு (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) கட்டாயமா?

ஆம், தற்போதைய விதிமுறைகளின்படி அஞ்சலகத்தின் அனைத்து சேமிப்பு திட்டங்களுக்கும் ஆதார் எண் மற்றும் பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
மைனர் கணக்குகள் எப்போது பெரியவர் கணக்காக (Major) மாற்றப்படும்?

மைனருக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன், அவர் தனது புதிய KYC ஆவணங்களைச் சமர்ப்பித்து கணக்கைத் தன் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

அஞ்சலகத்தில் 'செக்' (Cheque) மூலம் கணக்கு தொடங்கினால் எப்போது கணக்கு ஆரம்பமாகும்?

செக் வங்கியிலிருந்து பணம் அஞ்சலக கணக்கிற்கு மாறும் தேதியில் (Clearance Date) தான் கணக்கு தொடங்கப்பட்டதாகக் கருதப்படும்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் TDS எப்போது பிடிக்கப்படும்?

மூத்த குடிமக்கள் திட்டங்கள் மற்றும் கால வைப்பு திட்டங்களில் வட்டி வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பைத் (₹40,000 / மூத்த குடிமக்களுக்கு ₹50,000) தாண்டும் போது TDS பிடிக்கப்படும்.
 
அஞ்சலக வட்டி வருமானத்திற்கு வருமான வரிச் சட்டம் 80TTA என்ன சலுகை அளிக்கிறது?

சாதாரண அஞ்சலக சேமிப்பு கணக்கில் (Savings Account) ஒரு வருடத்திற்கு கிடைக்கும் வட்டியில் ₹10,000 வரை வரி விலக்கு பெறலாம் (பிரிவு 80TTA). மூத்த குடிமக்கள் 80TTB கீழ் ₹50,000 வரை விலக்கு பெறலாம்.

அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை எங்கு அறியலாம்?

அருகிலுள்ள ஏதேனும் ஒரு அஞ்சலகத்தை (Post Office) நேரில் அணுகலாம் அல்லது இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indiapost.gov.in பக்கத்தைப் பார்வையிடலாம்.